தலைப்பை படித்ததும் இதனை எழுதியவனை சமூக வலைதளங்களில் வசைபாடி கொண்டிருப்பார்கள் , பதிவை முழுமையாக படிக்காத மேல்புள் மேயும் மேதாவிகள். ஆனால் இந்த பதிவின் நோக்கம் அதிரையர்களை இழிவுபடுத்துவது அல்ல. மாறாக அதிரையர்களை பற்றி பிற ஊர்காரர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை சற்று விரிவாக விவரிக்கவே விரும்புகிறேன்.
அன்று வழக்கம்போல் சென்னை மன்னடியில் உள்ள 2வது (நடு) இந்தியன் டீ கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். என்னருகே நின்றிருந்த நமக்கு நன்கு பரீட்சையமான ஊரை சேர்ந்த ஒருவர் என்னிடம் நீங்க எந்த ஊர்? என வினா தொடுத்தார்.
நான் அதிரை என்று சொன்னதும், அவர் தன்னை ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் என அறிமுகம்படுத்திக் கொண்டார். பின்னர் எங்களின் பேச்சு நீண்டது, அப்போது அவர் அதிரையர்களின் அறியாமை குறித்து கவலையுடன் பேசினார்.
உலகில் பல நாடுகளில் தங்கி இருக்கும் அதிரையர்கள் தங்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என புகழாரம் சூட்டிய அந்த வெளியூர்காரர், சில சமயங்களில் பணத்தின் மீது கொண்ட மோகத்தால் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக தான் உழைக்க செல்லும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், தற்சமயம் கிடைக்கும் வருவாயை மட்டும் மனதில் கொண்டு அதிரையர்கள் எடுக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை செய்தார். இதுகுறித்து சந்தர்பவாதிகளும் அவர்களிடம் எடுத்து கூறுவது இல்லையாம். மேலும் அதிரையர்கள் பலர் இன்றும் அறியாமையில் சிக்கிதவிப்பதாக ஒரு சம்பவத்தின் மூலம் சுட்டிக் காட்டி தனது பேச்சை நிறுத்தினார் அந்த டிராவல்ஸ் உரிமையாளர்.
கடல் கடந்து வணிகம் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட சமூகம் இன்று பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறியாமையில் சிக்கியிருப்பது உண்மையில் வேதனைக்குரியது…
நாடு கடந்து செல்வதற்கு முன் அந்த நாட்டின் பொருளாதார நிலையை பற்றி அறிந்திருக்க வேண்டியது அதிரையர்களின் கடமை மட்டுமல்ல நமது உரிமை…
பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நமது வாழ்வை அடகு வைத்துவிட வேண்டாம்…