சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.
சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. அங்கு பாதுகாப்பையும் மீறி நேற்று மர்ம நபர் அரண்மனைக்குள் புகுந்து, பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மர்மநபர் சுட்டதில் பாதுகாவலர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். அரண்மனைக்குள் புகுந்த வாலிபரும் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து 3 வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலையாளிக்கு 28 வயது இருக்கும். இவன் சவுதி அரேபியாவை சேர்ந்தவன். சவுதி ராணுவத்தில் பணி புரிந்தவன் என விசாரணையில் தெரியவந்தது. எதற்காக அரண்மனையில் புகுந்து துப்பாக்கியால் சுட்டான் என தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
சவுதி அரேபியாவில் 2014-ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஷியா பிரிவினர் மீதும், ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலையும் அவர்கள் தூண்டுதலின் பேரில் நடத்தியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசு கருதுகிறது. முன்னதாக தலைநகர் ரியாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் 3 மறைவிடங்களில் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையில் நடமாடும் படி தன்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.