Home » டெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்… காரணம் என்ன ?

டெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்… காரணம் என்ன ?

0 comment

காற்று மாசால் பாதிக்கப்பட்டு டெல்லி மாநகரமே திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையும் புகை மூட்டமாக உள்ளது. நவம்பர் 7-ம் தேதி காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னையில் காற்று மாசு அளவு (Air Quality Index) 264 ஆகப் பதிவாகியுள்ளது. இப்போது, டெல்லியில் காற்றின் அளவு 254 ஆகப் பதிவாகியுள்ளது.

டெல்லியின் காற்று மாசுக்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சென்னையில் காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் பல அமைக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்திய வானிலை மையமும்கூட, டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது.

நம் சுற்றுச்சூழலில் PM 2.5-ன் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். 2.5 மைக்ரான் அளவிற்கும் குறைவான அளவு கொண்ட நுண்துகள்கள், எந்த அளவுக்கு காற்றில் கலந்துள்ளன என்பதைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்தான் இந்த PM 2.5. இந்த நுண்துகள்கள் காற்றில் கலக்கப் பல காரணங்கள் இருக்கின்றன.

இவை நம்முடைய முடியின் அடர்த்தியில் 3% தான் இருக்கும். காற்று புகைமூட்டமாக இருக்கவும் இவைதான் காரணம். இவை ஏன் காற்றில் அளவுடன் இருக்க வேண்டும் என்றால், இதன் அளவு அதிகமாகும்போது, இந்தத் துகள்கள் நம்முடைய சுவாசப் பாதைக்குள் எளிதில் சென்று நுரையீரலைத் தாக்கும். இதனால் சுவாசம் சார்ந்த பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா போன்ற உடல்நலப் பிரச்னை இருப்பவர்கள், இந்தக் காற்று மாசுபாட்டால் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுரைப்படி PM-ன் அளவு கன மீட்டருக்கு 25 மைக்ரோ கிராம்தான் இருக்க வேண்டும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைப்படி இந்த அளவு, இந்தியாவில் கன மீட்டருக்கு 60 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது சென்னையிலுள்ள PM 2.5-ன் அளவு அச்சமூட்டுவதாக உள்ளது. சென்னையின் அடையாறு பகுதியில் 128.71, மணலியில் 122.05 என இந்த அளவு பதிவாகியுள்ளது. அதைத் தவிர, சென்னையில் வேளச்சேரி, அண்ணா நகர், ராமாபுரம், விமான நிலையம் பகுதிகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மாலை அதிகமான மாசுபாட்டு அளவு, அடுத்த நாள் காலை மேலும் தீவிரமடைந்தது.

இன்னும் சில நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதால், அதுவரை சென்னையின் நிலைமை இப்படித்தான் இருக்குமோ என்றும் மக்கள் அஞ்சுகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார், “சென்னையில் காற்று மாசு அளவு பாதுகாப்பான அளவில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

வருவாய்த்துறை செயலாளரான J.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “காற்று மாசுபாட்டின் அளவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்மூலம் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்” என்று கூறினார். பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து, சென்னையின் காற்றுத் தரம் மேம்படத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் பேசிவருகின்றனர்.

காற்றில் PM 2.5 அளவு அதிகம் இருப்பதால், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்தக் காற்று மாசுபாட்டால், மக்களிடையே சி.ஓ.பி.டி (Chronic Obstructive Pulmonary Disease – COPD) என்ற நுரையீரல் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடல் இருப்பதால் அது இந்த மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்றாலும் பிரச்னை பெரிதாகும் முன் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து சென்னையைக் காப்பாற்ற வேண்டும்.

கடந்த திங்கள்கிழமை முதல் இன்று வரை காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவு அதிகரித்துக்கொண்டேதானிருக்கிறது. டெல்லியின் காற்று மாசுபாடுதான் இதற்கும் காரணமென்று சொல்வதற்குமுன், சென்னையைப் பாழாக்க, அதைச் சுற்றியே எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். இப்போதுதான் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து சென்னை தப்பித்துவந்துள்ளது. அடுத்ததாக, காற்று மாசுபாட்டுப் பிரச்னையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் தொடர்ச்சியாக சூழலுக்கு ஏற்படுத்தும் கேடுகள், நம்மையே திருப்பித் தாக்கும் என்பதற்கு இதைவிடப் பெரிய உதாரணம் கிடையாது.

தமிழக அரசு, தமிழகத் தலைநகரத்தின் சூழலை விரைவில் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Source : Vikatan

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter