பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில் கடந்த 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என கூறியுள்ளது.
மேலும் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்ட மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய நிலம் தங்களுடையது தான் என்பதை நிரூபிக்க இஸ்லாமிய அமைப்புகள் தவறிவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.