குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள், இந்த சட்டத்தால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என கூறி வரலாறு காணாத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டம் மற்றும் NRCக்கு இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் மாபெரும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மிக கடுமையாக எதிர்த்து வரும் தலைவர்களுள் மமதா பானர்ஜி முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.






