
டெல்லியில் இந்திய நுழைவுவாயிலின் முன் 10 டிகிரி செல்சியஸ் குளிரில் போராடி வரும் மாணவர்களுக்கு டீ கொடுத்து வரும் சீக்கிய சகோதரர்களின் செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை பயங்கர தாக்குதல் நடத்தியது. அதனை கண்டித்து, டெல்லி இந்திய நுழைவு வாயிலின் முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் தற்போது வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
நடுங்கும் குளிரிலும் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு இதம் அளிக்கும் விதமாக சீக்கிய சகோதரர்கள் இலவசமாக டீ வழங்கி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘இதுதான் எங்களின் ஒற்றுமையும் சகோதரத்துவமும்’ என்ற வாசகமும் பெருமளவு மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
இன்னும் பலர் தாங்களாகவே முன்வந்து உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அளித்து வருவதும் பாராட்டுகளைப் பெற்றுத் தருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.