குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம், ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல், ஜே.என்.யூ விடுதி மாணவர்கள் மீதான தாக்குதல் எனத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகின்றன. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் சாலையில் இறங்கி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். தினம் தினம் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியவாறே உள்ளனர். இப்படி இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தைப் புகழ்ந்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
சில தினங்களுக்கு முன்பு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.என்.யூ உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். மும்பையிலும் சிவாஜி பூங்கா மற்றும் இந்தியா கேட் பகுதி ஆகிய இடங்களில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்தப்பட்டதைக் கண்டித்து மும்பையைச் சேர்ந்த வெகோம் (Wecome) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், `சிவாஜி பூங்கா, விளையாட்டு மைதானமா அல்லது பொழுதுபோக்கு இடமா? அங்கு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. சிவாஜி பூங்காவில் விளையாட்டைத் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் ஆர்.ஐ சாக்லே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி தர்மதிகாரி, “அரசாங்கமும் மைதான அறங்காவலர்களும் சிவாஜி பூங்காவை வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம் எனக் கருதுகின்றனர். இதில் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். நீதிமன்றங்கள் ஒரு காவலாளி போன்று செயல்படும் என மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.
இப்போதெல்லாம் மக்கள் அமைதியாக ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இது அவர்களின் குரலைப் பலப்படுத்துகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எப்படி அமைதியாகப் போராட வேண்டும் என்பதை இளைய தலைமுறை நமக்குக் கற்பிக்கிறது. மூத்தவர்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார். மும்பை நீதிமன்றத்தின் இந்த கருத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.