இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.
1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.