மத்திய பிரதேசத்தில் பாஜக நடத்திய சிஏஏ ஆதரவு போராட்டத்தில், பாஜகவினர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ராஜ்கார்க் ஆட்சியர் நிதி நிவேதா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கார்க் பகுதியில் சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று போராட்டம் நடந்தது. ஆனால் இந்த போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல அம்மாவட்ட கலெக்டர் நிதி நிவேதா மற்றும் துணை ஆட்சியர் பிரியா வர்மா கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இவர்கள் கோரிக்கையை ஏற்காத பாஜகவினர் அங்கு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பாஜக தொண்டர்கள் கலெக்டர் நிதி நிவேதா மற்றும் துணை ஆட்சியர் பிரியா வர்மாவை தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் பிரியா வர்மா மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்கார்க் ஆட்சியர் நிதி நிவேதிதா பேட்டி அளித்தார். அதில், ராஜ்கார்க் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அதையும் மீறி போராட்டம் செய்ய பாஜகவினர் கூடினார்கள். அதோடு பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்கள்.
நாங்கள் அதை தடுக்க சென்ற போது எங்களையும் தாக்கினார்கள். சில பாஜக தொண்டர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். என்னை தவறாக சீண்ட முயன்றார்கள். அதனால்தான் அவரை நான் அறைந்தேன். வேண்டும் என்றே அவர்கள் இப்படி செய்தனர்.
இதை தட்டிக்கேட்ட துணை கலெக்டர் பிரியா வர்மாவையும் அவர்கள் தாக்கினார்கள். அவரின் கையை பிடித்து முறுக்கி திருகினார்கள். பின் பிரியா வர்மாவின் தலை முடியை பிடித்து தர தரவென இழுத்து சென்றனர். நாங்கள் போராட்டக்காரர்களை அமர வேண்டும் என்றுதான் கூறினோம்.
ஆனால் அதற்கே எங்களை அவர்கள் தாக்கி, அவமானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் நாங்கள் போலீசை லத்தி தாக்குதல் நடத்த அனுமதிக்கவில்லை. போலீஸ் எந்த தாக்குதலும் செய்ய கூடாது. மக்களை தாக்க கூடாது என்று கூறிவிட்டோம்.
அங்கிருந்து வெளியேற எங்களுக்கு போலீஸ்தான் உதவியது. பின் அமைதியாக அங்கிருந்து வந்துவிட்டோம். இரண்டு பேர் மீது போலீசில் முறையாக வழக்கு பதியப்பட்டுள்ளது என்று ஆட்சியர் நிதி நிவேதா கூறியுள்ளார்.