மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கேரளா அரசுதான் உச்சநீதிமன்றத்திலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம்.
இதனை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேரளாவை போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார்.
அத்தீர்மானத்தில், மத்திய அரசின் தீர்மானமானது அரசியல் சாசனத்தின் 14-வது சரத்துக்கு எதிரானது; மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது இச்சட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.