71 ஆவது இந்திய குடியரசு தின விழா பண்ணவயல் கிராமத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிராமத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வசந்தா ராஜாத்தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கேட்கப்பட்டது.பொதுமக்களுடைய கோரிக்கைகளையும் மனுவாக பெறப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதிகாரி வருகை தந்து மத்திய , மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இக்கூட்டத்தில்… மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கிராம சபை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மேலும் மத்திய அரசு எவ்வித சட்டம் கொண்டுவந்தாலும் இந்திய மக்கள் அனைவரையும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்கிற தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஊராட்சி செயலர் மதி நன்றி கூறினார்.


