சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இந்த வைரஸ் பாதிப்பினால் 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 11,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வுகான் நகரில் தொடங்கிய வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. `இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்புள்ள நபர்’ என்ற அந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட நிமிடம் தொடங்கி இப்போது வரை `தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கிவிட்டது’ என்கிற ரீதியிலான பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த 3,223 பேரை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரின் மகன் அருண் (27) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதற்கிடையே, தமிழகத்தில் ஒரு சீனர் உட்பட 6 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, திருச்சி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் 3 பேரும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேரும் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவர் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தீவிர சோதனையில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.
