குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழா அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற தடையையும் மீறி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். சென்னை இதுவரை கண்டிராத கூட்டம் இதுவென மக்கள் சிலாகித்து பேசினர். இத்தனை மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அரசுகள் தேவை தானா ? என்றும் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதேபோல் தஞ்சையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களால் இன்று தமிழகமே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.









