Home » மக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்… கட்டுப்பாடு காத்த தலைவர்கள் !

மக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்… கட்டுப்பாடு காத்த தலைவர்கள் !

0 comment

குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சகணக்கில் இஸ்லாமியர்கள் திரண்டதால் சேப்பாக்கம் மக்கள் கடலாக காட்சியளித்தது.

சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினரோடு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல இயக்கங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ. ஹாஸ்டல் நுழைவு வாயிலுக்கு முன்பு அதாவது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே வேனை குறுக்கே நிறுத்தி அதில் மேடை போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதால், இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் போலீஸாருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேடையில் பேசிய அனைத்து தலைவர்களும் சுருக்கமாக 5 நிமிடங்களுக்குள் தங்கள் பேச்சை முடித்துக்கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தங்களது பாணியில் மத்திய மாநில அரசுகளை கிழித்தெடுத்தனர்.

இதனிடையே சேப்பாக்கம் சாலையை இணைக்கும் எழிலகம் பிரிவு, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை, நேப்பியர் பாலம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு கடுமையாக கெடுபிடிகள் காட்டப்பட்டன. இதனால் வாகனங்களில் போராட்டத்திற்கு வந்தவர்கள் எங்கே வாகனங்களை நிறுத்துவது எனத் தெரியாமல் தவித்தனர். கூட்டம் எதிர்பார்த்ததை விட மேலே வந்ததால் போலீஸார் திடீரென அதிகமாக குவிக்கப்பட்டனர்.

ஆனால் எந்த அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல், சிறிய சலசலப்பு கூட இல்லாமல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் இஸ்லாமிய கூட்டமைப்பினர். இதனால் காவல்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டதை களத்தில் பார்க்க முடிந்தது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter