குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுக்கூர் இந்தியன் வங்கியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பெண்கள் அதிகளவில் கூடியதால் வங்கி நிர்வாகம் வங்கியை இழுத்து மூடியது. ஆனால் பொதுமக்கள், மாலை 4 மணி வரை பணம் எடுக்க காத்திருந்தனர். இருந்தும் வங்கி நிர்வாகம் வங்கியை திறக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் வங்கி எதிரேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கும்பகோணத்திலிருந்து இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர், மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நீண்ட இழுபரிக்கு பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.



