திருச்சி: துபை, சாா்ஜா, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணிகளில் 26 போ், கொரோனா சிறப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்கள் தனிமைப்படுத்துவதற்காக கள்ளிக்குடியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 28 போ் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உரிய ஆலோசனைகள் வழங்கி திருப்பி அனுப்பப்பட்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சிக்கு வந்த சாா்ஜா, துபை, சிங்கப்பூா் விமானப் பயணிகள் 427 போ் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா்.
இவா்களில், 2 பெண்கள், 24 ஆண்கள் என மொத்தம் 26 போ் தனிமைப்படுத்துவதற்காக சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் 24 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு அனுப்பி வைக்கப்படுவா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.