Home » கொரொனாவிலும் மதவெறி : வதந்திகளை பரப்பும் சக்திகள் மீது நடவடிக்கை வேண்டும் – காவல் ஆணையரிடம் PFI புகார் !

கொரொனாவிலும் மதவெறி : வதந்திகளை பரப்பும் சக்திகள் மீது நடவடிக்கை வேண்டும் – காவல் ஆணையரிடம் PFI புகார் !

by
0 comment

முஸ்லிம்களை இழிவு படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாநகர தலைவர் அப்சல்கான் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது :

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாட்டு மக்களையும் ஜாதி, மத பேதமின்றி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவ சங்கபரிவாரத்தை சார்ந்தவர்கள் இந்த கொரோனா பாதிப்பிலும் மதவெறியை புகுத்தி ஆதாயம் தேடும் முயற்சியாக வதந்திகளையும், வெறுப்பை விதைக்கும் செய்திகளையும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பரப்பி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

சீனாவில் கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் சீன மக்களின் உணவு பழக்கம் தான் இதற்கு காரணம் என்றும் அவர்கள் தான் உலகம் முழுவதும் இந்த நோயை கொண்டு சேர்க்கின்றார்கள் என்பன போன்ற வதந்திகளை சமூக வலைதளங்களின் வாயிலாக மீம்ஸ் மற்றும் டிக் டாக் போன்றவைகள் மூலம் பரப்பி வந்தனர். இதனால் அவர்கள் மீது பரிதாபம் ஏற்படுவதற்கு பதிலாக வெறுப்பை விதைத்தனர். பலரும் அவர்களுக்கு இந்த தண்டனை தேவை தான் என்பது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அவர்களை வெறுக்கத்தக்க மக்களாக காட்டும் கீழ்த்தரமான செயலை சிலர் செய்துவந்தனர்.

அதே போன்றே தமிழகத்திலும் இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி முஸ்லிம் வெறுப்பையே தொழிலாக கொண்ட இந்துத்துவ சங்பரிவார சக்திகள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் விதமாக வதந்தியான செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் தான் இந்த நோயை பரப்புகின்றார்கள் என்றும், பயோ ஜிகாத் என்றும், வெளிநாடுகளிலிருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் தான் இதனை பரப்புகிறார்கள் என்றும் பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இப்படி கொரோனா பாதிப்பை மதரீதியான வெறுப்புக்கு பயன்படுத்தும் விதமாக தவறான தகவல்களை இந்து முன்னணியின் மாநில தலைவர் முதல்வருக்கு அனுப்பிய அறிக்கையில் காண முடிகின்றது.

இது அப்பட்டமாக மத துவேஷத்தையும், வெறுப்பையும் மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதற்கு கொரோனா நோயை திட்டமிட்டு பயன்படுத்துவதை உறுதி செய்கின்றது. காவல்துறை கொரோனா வைரஸ் பெயரில் தவறான தகவல்களை தருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறியுள்ளது. ஆனால், மனித உயிரிழப்பில் இரக்கமும், கருணையும் பார்க்கவேண்டிய சூழலில் மதவெறுப்பை விதைக்கும் இத்தகைய கீழ்த்தரமானவர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதலமைச்சர் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சரும் இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் வதந்திகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்யவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

இந்த ஃபாசிசவாதிகள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். மக்கள் இவர்களை சரியாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது தேசத்தின் நலனுக்கு உகந்தது என்பதை இத்தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சுட்டிக் காட்ட விரும்புகின்றது.

மேலும், ஊடகமும் தனது பொறுப்பை மறந்து செயல்படுவது மிகவும் வேதனைக்குரியது. குறிப்பாக தினமலர் பத்திகை, கடந்த 26-03-2020 அன்றைய திருச்சி பதிப்பில் டீ கடை பெஞ்ச் பகுதியில் “….. ‘லவ் ஜிகாத் மாதிரி, கரோனா ஜிகாத் நடக்குதோன்னு மக்கள் எல்லாம் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்களாம் பா…’ என்று இழிவான செய்தியை பதிவிட்டுள்ளது. இது பத்திரிகை தர்மத்திற்கு எதிரான போக்கு மட்டுமல்ல மதவெறியை விதைக்கும் இந்துத்துவ சங்பரிவார சக்திகளுக்கு துணை புரியும் செயலாகும். வீண் வதந்திகளை செய்தியாக வெளியிட்ட இந்த பத்திரிகை மீதும் அதன் ஆசிரியர் மீதும் இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்ற கேள்விக்கு தமிழக அரசும் காவல்துறையும் உரிய பதிலளிக்க வேண்டும்.

எனவே, கொரோனா வைரஸின் பாதிப்பில் மதவெறியை புகுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வரும் இந்துத்துவ சங்பரிவார தலைவர்கள் மீதும் பொய் செய்திகளை வெளியிட்ட தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் மீதும் தமிழக அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter