குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இதனால் இன்னும் பலர் குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர். இந்நிலையில், ஜார்க்ண்ட் மாநிலத்தில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்காத ஏழைக் குடும்பத்தினருக்கு அரிசி வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால், உணவுக்கு வழியின்றி, 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டெகா என்ற இடத்தில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மிகவும் வறுமையில் வாடும் அந்த குடும்பத்தினர், போதிய கல்வியறிவு பெறாதவர்கள் என கூறப்படுகிறது. தங்களது ரேஷன் கார்டை, ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்ற விவரமும் அவர்களுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில், வழக்கம் போல் ரேஷன் கடைக்கு சென்றபோது, அரிசி வழங்க ரேசன் கடை ஊழியர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, பசியின் கொடுமையால் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.