தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் மேலோங்கி உள்ளது.
பல அடி உயரங்களுக்கு பேனர்களை வைப்பதால் சாலைகள் மறைக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பேனர்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படத்தை மற்ற கோஷ்டியினரோ மற்ற கட்சியினரோ கிழித்து விட்டாலோ போலீஸாருக்கு பெரும் தலைவலி ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டருகே ஏராளமான பேனர்களும், கட்சி விளம்பரங்களும் வைக்கப்படுவதால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதி கூறுகையில், உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று தமிழக தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் இந்த உத்தரவு குறித்து தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.