அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து வெளியே செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், மீறுபவர்களின் அனுமதி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்திடும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வாரத்தில் இருநாட்கள் மட்டுமே வெளியில் வர முடியும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை, வாரத்தில் இரு தினங்களில் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான அனுமதி அடையாள அட்டையை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துபவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் எண்களை அனுமதி அடையாள அட்டையில் பதிவிட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தங்களின் வீடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நாளை (21.04.2020) முதல் காவல்துறை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் அனுமதி அடையாள அட்டையை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற உள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள கடைகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், அனுமதி அடையாள அட்டையை ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்த நபரை தவிர்த்து, வேறு நபர்கள் பயன்படுத்தினால், அனுமதி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வருவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்.
கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 – 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.