தமிழகத்தில் இன்னும் 48 மணிநேரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் அடையார் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தற்போது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவி அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது, சராசரி அளவில் மழை பெய்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட அளவை விட, கூடுதலாகவே தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது. வடகிழக்கு பருவமழையும் சரியான அளவில் இருந்தால் விவசாயிகளுக்கும், தண்ணீர் தேவைகளுக்கும் சமாளிக்க ஏதுவானதாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்