ரேஷன் சர்க்கரை விலை ரூ.13.50 ஆக உள்ளது. தற்போது ரூ.11.50 விலை உயர்த்தி ரூ.25 ஆகிறது. நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்த ரேஷன் கார்டுகள் 1 கோடியே 98 லட்சம் இதில் 18.4 லட்சம் பேருக்கு தான் ரூ.13.50ல் சர்க்கரை கிடைக்கும்
மீதமுள்ள 95% பேருக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது.
வரும் 1 ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலுக்கு வருகிறது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் 1.90 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல்துறைகள் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 351 ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 6.70 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பச்சை மற்றும் வெள்ளை நிற ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் வெள்ளை நிற ரேஷன் கார்டுகளை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர். அவர்களுக்கு 5 கிலோ சக்கரை வழங்கப்படுகின்றன.
பச்சை நிற ரேஷன் கார்டுகள் சுமார் 1.86 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அதிக பட்சமாக 2 கிலோ சக்கரை, 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றன. அதைத் தவிர வறுமை கோட்டுக்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சக்கரை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் 18.64 லட்சம் பேர் உள்ளனர்.
அதில் தமிழகத்தைப் பொறுத்தவரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சர்க்கரை மட்டும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.13.50 வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 என்ற திட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் சேர்ந்தது.
இதன் மூலம் தமிழக ரேஷன்கடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படும் என்ற அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தமிழக அரசு, அந்த மானியத்தை ஏற்றுக் கொள்ளும் என்று அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். இந்தநிலையில், தமிழக அரசு சர்க்கரையின் விலையை திடீரென்று ஒரு கிலோவுக்கு ரூ.11.50 ஏற்றி நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழக அரசு ஒரு நபருக்கு 500 கிராம் சர்க்கரரை என்ற அளவில் அதிகபட்சம் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ சர்க்கரை வழங்கி வருகிறது.
சர்க்கரை கார்டுகளுக்கு ஒரு நபருக்கு 1.5 கிலோ வீதம் அதிகபட்சமாக ஒருகுடும்பத்திற்கு மாதம் 5 கிலோ வரை வழங்கப்படுகிறது.
இந்த சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. 2005-2006ல் 21 ஆயிரம் மெட்ரிக்டன் சர்க்கரை ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டது. 2016-17ல் இந்த அளவு 33,636 ெமட்ரிக் டன்னாக உயர்ந்து விட்டது.
மத்திய அரசு 10,833 மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே மாநில அரசுக்கு விநியோகம் செய்து வந்தது. ஆனால் தமிழக அரசு தற்போது 37,163 மெட்ரிக் டன் சர்க்கரையை பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரூ.13.50 விலைக்கு வழங்கி வந்தது.
மத்திய அரசு வழங்கிய சர்க்கரை தவிர மீதம் உள்ள சர்க்கரையை தமிழக அரசு வெளி மார்க்கெட் விலைக்கு வாங்கி விநியோகம் செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு மாதம் ரூ.20 கோடி மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்று வந்தது. 10,833 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.18.50 மட்டும்தான் மத்திய அரசு மானியம் தந்தது. இதனால், மாநில அரசுக்கு மாதம் ரூ.14 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
மத்திய அரசு உத்தரவுப்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் எந்த குடும்பமும் கண்டறியப்படவில்லை என்றாலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் கீழ் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களுக்கும் சர்க்கரை விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுவிநியோக திட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டுமே சர்க்கரை மானியம் வழங்க வேண்டும்.
அவர்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.18.50 மானியம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
மற்ற செலவுகளை அந்தந்த மாநிலங்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1.6.2017 உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.