கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதில், ”கேரளா மனித வள மேம்பாடு, சுகாதார நலன் மற்றும் கல்வியில் நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
வெளிநாடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை இந்தியா கையாள கேரளமே தலைமை தாங்குகிறது. கேரளா இந்திய வர்த்தகத்தின் எல்லையாகவும் விளங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்தன. அரேபிய மற்றும் ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் மசாலாப் பொருட்களைத் தேடி கேரளாவையே வந்தடைந்தன.
கேரளத் துறைமுகங்களின் செயல்திறனையும், நெறிவழுவா நடைமுறைகள் குறித்தும் அவர்கள் (கேரளா) எழுதியிருந்தனர். கேரள நிர்வாகிகளின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
கேரள ஆயுர்வேத மையங்கள் நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. அவை மனதளவிலும் நோயாளர்களைப் புத்துணர்வாக்குகின்றன.
எத்தியோப்பியாவில் உள்ள ஏராளமான முன்னோடி பள்ளி ஆசிரியர்களை என்னுடைய பயணத்தின் போது கண்டேன். அவர்கள் கேரளத்தில் இருந்து வந்தவர்களே.
கேரள மக்கள் தங்களின் கல்வியையும், அறிவையும் நம் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்த விரும்புகின்றனர். அர்ப்பணிப்பு மிக்க இந்திய கால்பந்து ரசிகர்களின் தாயகம் கேரள மாநிலமே. யு-17 உலகக் கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்திவரும் கேரளத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய தீக்ஷா பூமிக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ”அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது” என குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த அக்.25-ம் தேதி கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக எதிர்க்கும் திப்பு சுல்தானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தைப் புகழ்ந்துள்ள குடியரசுத் தலைவரின் பேச்சு பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்டோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.