கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும் அரசின் ஊரடங்கை ஏற்று வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவ்வாறு வீட்டிலேயே இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கைப்பேசியை உபயோகித்தே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளை கையிலெடுத்து நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது அதிகப்படியான மக்கள் குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள், மொட்டை மாடியில் நின்று பட்டம் விடுவதை கையிலெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டங்கள் அதிரை வானில் தென்படுகின்றன.
சரி விசயத்திற்கு வருவோம்!
மொட்டை மாடியில் நின்று பட்டம் விடுவதில் தவறில்லை. ஆனால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் அது பெரும் அசம்பாவிதத்தில் முடிய வாய்ப்புள்ளது. ஏனெனில் மாஞ்சா நூல் உயிரை பறிக்கும் வல்லமையுடையது.
பட்டம் விட மாஞ்சா நூலை பயன்படுத்தி, அது எதிர்பாராதவிதமாக எங்கோ சென்று கொண்டிருக்கும் ஒருவரின் கழுத்தை அறுத்து, ரத்தம் அதிகமாக வெளியேறி உயிரே பிரிந்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம்.

இதனை கருத்தில் கொண்டே மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பட்டம் விடலாம்.. தவறில்லை.. ஆனால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவது தவறு மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட..
பட்டம் தானே விட்டுக்கொண்டிருக்கிறான் என பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துவிடாமல், எவ்வாறான நூல்களை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகள் பட்டம் விடுகிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம். வியாபாரிகளும் உயிர் கொல்லியான மாஞ்சா நூல்களை விற்காமல் இருப்பது சாலச்சிறந்தது.
விளையாட்டு வினையாகிவிடக்கூடாது…
– அதிரை அன்சர்தீன்