தஞ்சை, நவ.1: தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தண்ணீர் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன் தினத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வடிகால்களிலிருந்து ஆறுகளில் தண்ணீர் சேரும் இடத்தில் சேறுகள் தேங்காமல் அப்புறப்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் மொத்தம் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் வடிகால் பகுதிகளில் உள்ள சேறுகளை தூர்வாரி, கல்வெட்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடற்கரை பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் மனிதர்களும், கால்நடைகளும் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார்.ஆய்வின்போது ஆர்.டி.ஓ.சுரேஷ், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் சதீஷ், மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, நகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.