Home » முஸ்தபா, சைமனின் மரணங்கள் கற்றுத்தந்தது போதாதா.. இதென்ன பூச்சாண்டி ஆட்டம்.. வெங்கடேசன் எம்பி காட்டம் !

முஸ்தபா, சைமனின் மரணங்கள் கற்றுத்தந்தது போதாதா.. இதென்ன பூச்சாண்டி ஆட்டம்.. வெங்கடேசன் எம்பி காட்டம் !

0 comment

“காப்பாதுங்கம்மா
.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே…” என்றும் “தாவுடா.. தாவு.. எங்கே தாவறது, நானே தொங்கிட்டு இருக்கேன்…” என்று கொஞ்சம் வடிவேலு டயலாக், கொஞ்சம் மீம்ஸ், கொஞ்சம் டிக்டாக், என எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு விழிப்புணர்வு வீடியோவாக மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் MP தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

திருப்பூர் காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக் குறும்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிகிற நான்கு இளைஞர்களை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றுகிறார்கள். ஆம்புலன்ஸுக்குள் கொரோனா நோயாளி ஒருவர் இருக்கிறார். பதட்டமான இளைஞர்கள் எப்படியாவது அந்த நோயாளியிடமிருந்து தப்பிக்க, படாத பாடுபட்டு ஆம்புலன்ஸைவிட்டு வெளிவர முயலுகிறார்கள்; கதறுகிறார்கள்; ஜன்னல்களுக்குள் புகுந்து வெளிவரப்பார்க்கிறார்கள்; அப்படி வெளியேறுகிறவர்களைப் பிடித்துப் பிடித்து உள்ளே போடுகிறது காவல்துறை. கடைசியில் காவல்துறை அதிகாரி ஒருவர், “கொரோனா உயிர்கொல்லும் வியாதி என்று கொரோனா நோயாளியைப் பார்த்தவுடன் வருகிற பயம், ஏன் ஊரடங்கின் போது வருவதில்லை? உங்களுக்கு அருகில் இருப்பவர் கொரோனா நோயாளியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலேயே இருங்கள்” என்று நீதிசொல்லி முடிக்கிறார்.

இதென்ன பூச்சாண்டி ஆட்டம்? விதியை மதிக்காமல் ஊர்சுற்றுவோரைத் திருத்த இதுவா வழி? மதுரை முஸ்தாபாவின் மரணமும் மருத்துவர் சைமனின் மரணமும் கற்றுத்தந்தது போதாதா? இன்னும் இந்த stigmaக்கு நீர் பாய்ச்சி வளர்க்க நினைகின்றதா காவல் துறை?

பிழையைத் திருத்த வேண்டுமே ஒழிய, பயமுறுத்தல் மூலமாக அதனை வேறொரு பெரும்பிழையாக மாற்றிவிடக் கூடாது. தொழுநோயிலும் காசநோயிலும் நடைபெற்ற சமூக ஒதுக்கலில் எத்தனை பேர் மாய்ந்தார்கள், எத்தனை திருமணங்கள் முறிந்தன, எத்தனை பேர் அனாதையானார்கள் என்பதை வரலாறு அறியாதா? இன்று கொரோனாவில் அதை மறுபடி ஏற்படுத்த முனைகிறதா காவல்துறை? இது, பொதுச்சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய சிறுபுரிதல்கூட இல்லையா?

இன்று தமிழ் மக்களிடையே வைரசைவிட வைராலாகிக் கொண்டிருக்கிறது இந்தக் குறும்படம். நோய் பெற்றவர்களையும் தொற்று வந்துவிடுமோ என அச்சத்தில் ஒதுங்கி இருப்பவர்களையும்
முதல்நிலைப் போராளியாய் நின்று அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்களையும் அச்சுறுத்துகிற, கேவலப்படுத்துகிற வீடியோ இது.

மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க செய்தி-மக்கள் தொடர்புத்துறை செய்யவேண்டிய வேலையை காவல்துறை ஏன் செய்ய வேண்டும்?

தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இதுபோன்ற தவறான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தனது முகநூலில் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter