Home » கண் இமைக்கும் நொடிக்குள்.. கடந்து போன நேரங்கள்.. கற்றுத்தந்த பல பாடங்கள்..!

கண் இமைக்கும் நொடிக்குள்.. கடந்து போன நேரங்கள்.. கற்றுத்தந்த பல பாடங்கள்..!

by
0 comment

கடல் அலையும் கடிகார முள்ளும்..

எத்தனையோ பேரிடர்கள் வந்த போதிலும் கூட ஓயா கடல் அலைகளைப் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்காகவும் நிற்காமல் தன் பாதையை நோக்கி ஓடும் கடிகார முள்ளும் நிற்காமல் ஓடி கொண்டே இருக்கும். நேரம் என்பது அற்புதமான உன்னதமான பொக்கிஷம். அதை சரியான முறையில் பயன்படுத்துபவர் வெற்றியடைகிறார். நேரத்தை தவறவிடுபவருக்கு மிஞ்சுவதோ தோல்வி தான்.

நேரத்தில்.. சிலர் நேரம் போக மாட்டேங்குது எனவும், சிலர் என்னடா இவ்வளவு வேகமா போகிறது எனவும் நேரத்தை கலாய்த்து சொல்லிகொண்டு இருப்பார்கள். உண்மையில் நேரம் வேகமாகவும் போகவில்லை; மெதுவாகவும் போகவில்லை. நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தியதால் பயனடைந்தும் இருக்கிறார்கள். அதைப்போல நேரத்தை அசட்டை செய்ததால் திரும்பப்பெற முடியாத அவர்களுக்கு முக்கியமானதையும் இழந்தும் இருக்கிறார்கள்.

அதிகமானோர் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறான வழிகளிலும், நேரத்தை கடப்பதற்காக வீணான பேச்சுக்களையும், அறிவை கெடுக்கும் மொபைல் விளையாட்டு போன்றவற்றிலும் நேரத்தை கழித்து வருகிறார்கள். நேரத்தை எப்படி கழிக்க வேண்டும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலேயே தங்க பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ளுவது கடினமாக இருக்கும்.

ஒவ்வொன்றுக்கும்  ஒவ்வொரு நேரம் காலம் உள்ளது. எல்லாருக்கும் அடிப்படையாக உள்ளது உணவு. அதைக்கூட சிலர் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. கண்ட நேரத்தில்  சாப்பிடுவதால் பிற்காலத்தில் நோய்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் சிலர் கண்களுக்கு தேவையான ஓய்வைக் கொடுக்காமல் உறங்கும் நேரத்தை செல்போனில் வீணடித்து பல மன அழுத்தத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு வாழ்கையை இழந்து தவிக்கின்றார்கள். அடிப்படைக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால், சரியான நேரத்தில் கல்லூரி செல்வது, அலுவலகம் செல்வது என ஒவ்வொன்றிலும் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். சில இடங்களில்ஒரு நாள் அலுவலகத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக சென்றால் அன்றைய நாள் முழுவதும் சம்பளம் இல்லாமல் போய்விடும். ஒரு நாள் தாமதமாக செல்வதற்கு இப்படி என்றால் வாழ்வில் எவ்வளவு வீணடித்து இருப்போம். நிச்சயம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பலருடைய கருத்து 24 மணி நேரம் போதவில்லை என்பதாகவே இருக்கிறது. ஏன் போதவில்லை ? சரியான திட்டமிடலுடன் அதனை முறையாக நம் வாழ்வில் அமலுக்கு கொண்டு வரும் பொழுது நிச்சயம் 24 நேரம் என்பது போதுமானதாகவே இருக்கும். காலையிலிருந்து இரவு வரை நம் நேரத்தை எவ்வாறு செலவிட போகிறோம் என்ற திட்டமிடல் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நேரத்தை பலவிதத்தில் தவறவிட்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் விபத்தில் படுகாயமடைந்தவரை மருத்துவமனை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம். ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பார். சிகிச்சைக்காக தாமதமாக அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பர். மருத்துவமனையில் அனுமதித்ததும், டாக்டர் பரிசோதித்துவிட்டு கூறுவார், ‘5 நிமிடங்கள் முன்பு கொண்டு வந்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம்’. இம்மாதிரியான சமயத்தில் நேரத்தை தவறவிடுவது என்பது உயிரிழப்பில் முடியும் ஆபத்து கூட உள்ளது. இது போன்று வாழ்க்கை நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம்..

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

நாம் காலத்தையும் நேரத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி தான். நேரத்தை அற்பமாக நினைக்கக்கூடாது.. ஏதாவது வேலை இருந்தால் நாளைக்கு செய்கிறேன் என்று சொல்லி சொல்லி நேரத்தை கடத்தாமல் அன்றைய தினமே செய்து முடித்தல் வேண்டும். முடிந்தவரையில் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரு வினாடியின் அருமை, ஒலிம்பிக்கில் சக வீரனிடம் ஒரு வினாடி குறைவில் தங்கப்பதக்கத்தை பறிகொடுத்த வீரனுக்கு தான் தெரியும். எனவே ஒரு முறை கடந்துவிட்டால், மீண்டும் வரவே வராத அறிய வகை பொக்கிஷம் நேரம். அதனை ஆக்கப்பூர்வமான வழிகளில், பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய கையிலேயே உள்ளது!

– அதிரை ஃபாய்ஜ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter