அதிரையின் மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து ஹாஜா நகர் வழியாக கடற்கரைத் தெரு வரை சாலை ஒன்று உள்ளது. இச்சாலையானது , கடற்கரைத் தெருவை அதிரையின் பிற பகுதிகளோடு இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. அதிரை ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையாகவும் இது இருக்கிறது. இச்சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடற்கரைத் தெருவாசிகள் இந்த சாலையை தங்களுடைய பிரதானச் சாலையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இச்சாலை மிகவும் மோசமானதாகவும் , வாகனங்களை இயக்குவதற்கு லாயக்கற்றதாகவும் உள்ளது. தற்போது அதிரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்து வருவதால் , இச்சாலையில் ஆங்காங்கே சிறு சிறு குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில் வாகனங்களை ஓட்டுவதால் , வாகனங்கள் பழுதாவதாக வாகன ஓட்டிகளும் புகார் தெரிவிக்கின்றனர். மிகவும் மோசமான நிலையில் உள்ள இச்சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.