பணமதிப்பு நீக்கத்தைக் கண்டித்து திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்தும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன. அதன்படி, திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களின் தலைநகரங்களில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
திமுக தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் சூளை தபால் நிலையம், பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில் என 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைப்பது என திமுக முடிவு செய்திருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதற்கு நேர் எதிரான முடிவை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.