கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாகத் திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தடை விதிக்கக் கோரிக் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சு சின்னப்பா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் இன்று அரசு சார்பில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பெங்களூர், மைசூர், குடகு, குல்பர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடகு மாவட்டத் தலைநகரான மடிக்கேரியில் அரசு பேருந்துகள் மீது சிலர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேருந்துகளின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதையடுத்து வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக மடிக்கேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடகு மாவட்டம் மடிக்கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.
அதேபோல், தார்வாட் மாவட்டம் ஊப்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் குல்பர்க்காவிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.