தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி ரோடு,புதுப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள மரைக்கா அவர்களின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.அந்நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.இந்த சத்தத்தை கேட்டவுடன் திருடர்கள் ஓடிவிட்டனர். கடந்த சிலவருடங்களாகவே அதிராம்பட்டிணத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதற்கான சரியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லையென்றும் போதிய ரோந்து பணிகளை மேற்கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் அதிரை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்களிடையே கேட்கையில் அவர்கள் கூறியதாவது,அதிராம்பட்டிணத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தொழில் சம்மந்தமாகவும்,பணியின் காரணமாகவும் அரபுநாடுகளிலும்,சென்னை போன்ற நகரங்களிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.அவர்கள் ஊருக்கு வருவதாக இருந்தால் ரமலான்,பக்ரீத்,மற்றும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் தான் வருகை தந்து வீட்டில் வசிக்கின்றனர்.அது போக மீதியுள்ள நாட்களில் வீடுகள் பூட்டியே காணப்படுவதால்,திருட்டு கும்பல்கள் பகலில் நோட்டமிட்டு இரவில் திருடுவதற்கு வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் தான் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றனர் .