Friday, March 29, 2024

உழைப்பாளர் தினமும் அதன் பின்னணியும் !!

Share post:

Date:

- Advertisement -

இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்? பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகிறது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

பின்னால் ஒரு கதை :

இதற்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கிறது. மிக முக்கியமான வரலாறு அது. அதுதான் தொழிலாளர் தினமான மே தின வரலாறு.

மே தின வரலாறு :

1880 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 – ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை.

விடுமுறை நாள் இல்லை :

மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்.

20 மணி நேர வேலை :

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு நாடுகளில் ஒரு கொடுமையான வழக்கம் இருந்தது. நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

எதிர்த்த இங்கிலாந்து இயக்கம் :

இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதற்கு எதிராகப் போராடியது. நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் கோரிக்கை.

உலகளாவிய வேலைநிறுத்தம் :

1832 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதுபோல, பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

எட்டு மணி நேர கோரிக்கை :

இந்தக் கூட்டமைப்பு ‘எட்டு மணி நேர வேலை’ கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது மிகப் பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. கறுப்பு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இயக்கம் வலுப்பெற்றது. அதற்கு முன்பு கறுப்பு அடிமைகள், தாங்கள் இறக்கும்வரை ஒரு எஜமானனின் கீழ் உழைத்து ஒடுங்கித் துன்புற்று வாழவேண்டியிருந்தது.

நாடு தழுவிய வேலைநிறுத்தம் :

அத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.

இரண்டு லட்சம் தொழிலாளர்கள் :

1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது.

கோபம் கொண்ட தேசியப்படை :

கோபம்கொண்ட தேசியப்படையினர், தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி, தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்கு முறை ஏவப்பட்டது.

தூக்கு தண்டனை விதிப்பு :

தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டுபேர் மீது, கொலை சதித் திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தூக்குத் தண்டனையும் விதித்தது.

அணி திரண்ட அமெரிக்கா :

கொல்லப்பட்ட தொழிலாளர் தலைவர்களுக்கான இறுதி ஊர்வலம் 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள் நடந்தது. அந்த ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது.

மனதை உலுக்கிய இறுதி ஊர்வலம் :

நாடு முழுவதிலுமிருந்து ஐந்து லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் அமெரிக்கா முழுதும் ‘கறுப்பு தினமாக’ அனுசரிக்கப்பட்டது. சிறைபட்டிருந்த மற்ற மூன்று தலைவர்கள் 1893 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தொழிலாளர் மாநாடு :

1889 ஆம் ஆண்டு ஜூலை 14 – ஆம் நாள் அன்று, பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் மாநாடு’ கூடியது. கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

உரிமைக்குரல் நாள் :

உலகத் தொழிலாளர்கள் அனைவரும் எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.

மெல்ல மலர்ந்த விடுதலை :

இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.

முன்னோர்களின் தியாகம் :

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது.

ஒற்றுமைக்கான தினம் இது :

பெரும் போராட்டங்கள்தான் மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தன. இன்றைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்’ என்பதுதான் மே தினம் நமக்கு அளிக்கும் முழக்கமாகும்.

நனவாகுமா இவர்களுக்கும்? :

ஆனால், இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம் என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எனப்படும் கல்லுடைக்கும் கொத்தடிமைகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் :

எத்தனையோ குழந்தைகள், பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள், டீ கடைப் பணியாளர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஹோட்டலில் மேசை துடைப்பவர்களாக, கட்டிட வேலைகளில் மண்ணும் கல்லும் சுமப்பவர்களாக எத்தனையோ கடுமையான வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

உணவுக்குக் கூட வழியில்லை :

அவர்களது பெற்றோர்களுக்கு, அவர்களைப் படிக்க வைக்கக்கூடிய அளவு சம்பாத்தியம் இருப்பதில்லை. படிப்பு என்ன, தங்கள் பிள்ளைகளுக்குப் போதுமான உணவு கொடுப்பதற்குக்கூட முடியாத அளவில்தான் அவர்களது வருமானம் இருக்கிறது. அதனால்தான் அந்தச் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள்.

எல்லோரும் எல்லாமும் பெற :

இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும். இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது. அனைத்து உழைப்பாள நண்பர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் குழு சார்பாக இனிய மே தின நல்வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...