கொரோனாவை தடுக்க நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒரு பெட்டிக்கு 54 பயணிகள் என்ற அளவில் தனிநபர் இடைவெளியுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த ரயில்களில் கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் வசூலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோனியா காந்தி கூறியுள்ளதாவது: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான கட்டணத்தை மத்திய அரசு பொறுப்புடன் ஏற்றுக் கொள்கிறது. அப்படியான சூழ்நிலையில் ரயிலில் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணம், உணவு செலவுக்கு மத்திய அரசு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யலாம்.
4 மணிநேர அறிவிப்பு கொடுத்து லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆகையால் பிற மாநிலங்களில் பரிதவித்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கினர். உணவு, குடிநீர், பணம், மருந்துகள் இவை எதுவும் இல்லாமல் போதிய பாதுகாப்பும் இல்லாமல் சொந்த ஊருக்கு பல ஆயிரம் பேர் இப்படி சென்றனர். 1947-ம் ஆண்டு நாட்டு பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த முதலாவது மிகப் பெரிய மனித பேரவலம் இது.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்திருக்கிறது. மத்திய அரசு இப்படியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அது அந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக அமைந்திருக்கும். ஆனால் மத்திய அரசு இதனை செய்யவில்லை.
இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் முழுவதையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும். ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் இந்த ரயில் கட்டணத்தொகையை ரயில்வே நிர்வாகத்துக்கு செலுத்தும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மேற்கொள்ளும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.