தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கல்யாண ஓடை கிராமம். இந்த கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் மிகப்பெரிய ஒரு கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப் பண்ணையை சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில் இந்த கோழிப்பண்ணையின் கழிவுகளை அந்தப் பகுதியிலேயே கோழிப்பண்ணையின் நிர்வாகத்தினர் கொட்டி விடுவதாகவும் இதனால் ஈ மற்றும் கொசு அதிகளவு உற்பத்தியாகி இப்பகுதியில் உள்ள மக்கள் பல தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இன்று அதிகாலை இந்த கோழி பண்ணையில் புதிதாக குஞ்சுகளை விடுவதற்காக டெம்போ மூலம் கோழிக்குஞ்சுகளை பண்ணை நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் திடீரென பண்ணையை முற்றுகையிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த மதுக்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


