கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து வருகிறார் 32 வயதான இஸ்லாமிய பெண் இம்ரானா.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 3 குழந்தைகளுக்குத் தாயான இஸ்லாமிய பெண்ணான இம்ரானா என்பவர், நோன்பு கடைபிடித்துக்கொண்டே கொரோனா ஒழிப்புப் பணியைச் செய்து வருகிறார்.
இம்ரானாவின் கணவர் நியாமத் அலி ஒரு ப்ளம்பர். இருவரும் வேலை செய்துதான் குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். தற்போது நாடு தழுவிய ஊரடங்கு நிலவுவதனால், இருவருக்கும் பணி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள கிருமி நாசினி அடித்து வருகிறார் இம்ரானா.
இதுகுறித்து, “இந்தியாவின் மதச்சார்பின்மை கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்க நினைக்கிறேன். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்னும் செய்தியை நான் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் இம்ரானா.
சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு டெல்லியில் இந்துத்துவ கும்பலால் ஏற்பட்ட வன்முறையால் எரிந்த அந்தப் பகுதியில், தற்போது இரு தரப்பினரிடையே நல்லிணக்கம் நிலவுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : Kalaignar Seithigal