கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பலரின் கவனத்தை பெற்றது.
இதனால் தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிரையிலும் தங்கி இருந்து பல்வேறு வேலைகள் செய்து வந்த 141 வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிரையில் இருந்து இன்று காலை 7 மணியளவில் 4 அரசு சிறப்பு பேருந்துகளில் முறையான அடையாள அட்டைகளுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிரையில் இருந்து புறப்படும் அவர்கள், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் சென்று பின்னர் தஞ்சை சென்று அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். மாஸ்க் அணிந்து பேருந்துக்கு ஒரு காவலர் என பல்வேறு நடவடிக்கைகளுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.