Home » அந்தநாள் நோன்பு கால நினைவுகள் !

அந்தநாள் நோன்பு கால நினைவுகள் !

0 comment

தகவல் தொடர்பு எதுவும் இல்லாத அந்த காலத்தில் நோன்புப் பிறைப் பார்ப்பதில் இன்று தெரியுமா தெரியாத என்ற ஏக்கமும், ஆர்வமும் எல்லோரது கண்களிலும் பிரதிபலிக்கும். மாலை 6, 7 மணிக்குள் பிறை தெரிந்து விட்டால் நாகூர் தர்காவில் அதிர்வேட்டு ( குண்டு) போட்டு நகரா அடிக்கும் ஓசை ஊரெங்கும் கேட்கும்( அமைதியான மற்ற எந்த ஓசையும் இல்லாத காலம்)தெரியாவிட்டால் அனைவரும் வானத்தைப் பார்த்த வண்ணம் இருப்போம். நாகூர் தர்கா ஆபிஸ் வாசலில் மக்கள் கூட்டமாய் கூடி செய்தி அறிய நிற்பார்கள். வெளியூருக்கு போன் பண்ணிக் கேட்பார்கள். வெளியூர்களிலிருந்தும் போன் வரும். போன் மணியடிக்கும் சத்தம் கேட்டதும் கொஞ்சம் நகர்ந்து நிற்பவர்கள் எல்லாம் “செய்தி வருது, செய்தி வருது” என்று நெருங்கி வருவார்கள். இரவு 8, 9 மணிக்கு கூட எதாவது வெளியூரில் பிறை பார்த்தாச்சி என ஆதாரப்பூர்வமான செய்தி வந்ததும் அறிவிப்பு ஓசை செய்வார்கள். அந்த ஓசையைக் கேட்டதும் சிறுவர் சிறுமியரின் ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது. ஆஹா பிறைப் பாத்தாச்சி ராவைக்கு நோன்பு என்று அந்த பிஞ்சு நெஞ்சுகளெல்லாம் உல்லாச வானில் பஞ்சுகளாய் பறக்கும். பள்ளி வாசல்களும் சிறப்பு தொழுகைகான ஏற்பாட்டு பணிகளில் வேகமாய் இயங்கும். அனைவரது இல்லங்களிலும் ஒருவிதமான சுறு சுறுப்புக் கலை. இரவில் கடைத்தெருவில் மீன், இறைச்சி, காய்கனிகள், மளிகை சாமான்கள் வாங்கிட கையில் பெரிய பையுடனும், கறி வாங்கும் கூடையுடனும் மக்கள் கூட்டம். நோன்புக் காலங்களில் மாலை முதல் இரவு வரை பெரிய பெரிய மீன்கள் கிடைக்கும், இறைச்சியும் கிடைக்கும்.

பிறைக் கண்டவுடன் ஒரே கொண்டாட்டம்தான். அப்போதெல்லாம் சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளில் நோன்பும், பெருநாளும் நமக்கு ஒரு நாளைக்கு முன்னதாக வரும். நமக்கெல்லாம் அடுத்த நாள் வரும். இங்கே எல்லோரும் பிறை எடுப்பது ஒரே நாளாகத்தான் இருக்கும். எல்லாம் ஒரே கொள்கையுடைவர்களாக அன்று இருந்தோம். மேலபாளையத்தில் இருந்து பெண்களுக்காக திராவியா நடத்த மூத்த ஹஜரத் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்பே நாகூர் வந்து விடுவார். அவர்களைப் பார்த்ததுமே நோன்பு அடையாள குருவி வந்துடுச்சி நோன்பு வரப் போகுது என எல்லோரும் பேசிக் கொள்வார்கள். அதுவும் பெண்கள் அடையும் மகிழ்வுக்கு அளவே இல்லை. சஹர் உணவுக்கான ஏற்பாடுகள் தட புடலாய் நடக்கும். 6,7 வயது நிரம்பிய சிறுவர், சிறுமிகளை தலை (முதல்) நோன்பு பிடிக்க வைப்பார்கள். பிள்ளைகளுக்காக சிறப்பான சாப்பாடு சமைப்பார்கள், தின்பண்டங்களும் ஏராளம் செய்வார்கள். தலை நோன்பு பிடிக்கும் பிள்ளைக்கு இறைவனின் மகிமையை எடுத்து சொல்லி, நோன்பின், நோன்பு மாதத்தின் மாண்பினை புரிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை விளக்கி, ஏழை எளியவர்களுக்கு தானம் தருமம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்து, இறைவணக்கத்தின் மகத்துவத்தை அறிய வைத்து, ஐந்து கடமைகளில் இது மூன்றாம் கடமை என்பதையும், அதன் மூலம் கிடைக்கும் உண்மையான இனிமைகளையும் இதமாக இதயத்தில் ஏற்றி வைத்து, பிள்ளைகளைக் கொஞ்சி குலாவி புத்தாடை அணிவித்து முதல் நோன்பு பிடிக்க வைப்பார்கள். அந்நாளில் அது ஒரு சீர் சடங்காகவே நடக்கும். எல்லா வீடுகளுக்கும் சொல்லி அனுப்புவார்கள். சமையல் அயிட்டங்களையும் பகிர்வார்கள். தலை நோன்புப் பிடித்த பிள்ளைக்கு அன்பளிப்புகள் ஏராளம் குவியும். வித விதமான பசியாற்றும் உணவு வகைகள். நோன்பு காலத்தில் மட்டும் சாதாரண ஆப்பம் மஞ்சள் நிற ஆப்பமாக மாறும். அதையெல்லாம் பார்க்கும் அந்த பிள்ளைகளுக்கு மனமெல்லாம் மகிழ்ச்சிப் பெருக்கு உண்டாகும். தான் பசித்திருக்கும் நிலை அதற்கு தெரியாது. ஆஹா ஒவ்வொரு நாளும் இப்புடி நோன்பு புடிச்சா எல்லாரும் வந்து கட்டியணச்சி முச்சிமிட்டு காசு பணம் எல்லாம் தருவாஹலே என்ற ஆவல் பிறக்கும்…

தெருவெல்லாம் மங்கிய வெளிச்சம் தான். ஏதோ ஆங்காங்கே தெருவில் உள்ள ஒரு சில விளக்குக் கம்பங்களில் சீசா குடுவை விளக்கு தன்னால் முடிந்த வெளிச்சத்தைக் கக்கிக் கொண்டுத் தொங்கும். அந்தக் காலத்தில் கும்மி இருட்டில் சென்றாலும் பயம் இருக்காது. காரணம் உள்ளங்கள் வெளிச்சமாய் இருந்தன. திராவிஹ் தொழுகைக்கு ஆண்கள், பெண்கள், மற்றும் எல்லோரும் புறப்படுவோம். தொழுகை முடிந்ததும் வாழைப்பழம் கொடுப்பார்கள். பற்றாக்குறைக் காரணமாக சில சமயம் சின்ன பிள்ளைகளுக்கு பாதி பழம் கொடுப்பதும் உண்டு. சில சமயம் அதுவும் கொடுக்காமல் விடுவதும் உண்டு. அந்நாளில் வாழைப் பழங்களின் விலை, ரஸ்தாளி பழம் ஒரு ருபாய்க்கு 20, பச்சநாடாம் பழம் ஒரு ருபாய்க்கு 30. திராவிஹ் தொழுகை முடிந்ததும் எங்கள் நண்பர்களுடன் நாகூர் ஹனிபா அண்ணன் வீட்டு வாசல் அருகே விடிய விடிய சடு குடு விளையாட்டு, தூங்கு மூஞ்சி மரங்களில் ஏறி மர சுட்டாங்கி, பல இடங்களில் கேரம் போர்டு விளையாட்டும் நடைபெறும். சில நாட்களில் நள்ளிரவு தொழுகைக்கு போறோம் என்று சொல்லி விட்டு இரவுகாட்சி சினிமாக்கு செல்வது தெரிந்து வீட்டில் அடி வாங்குவதும் உண்டு. பள்ளியில் சிக்கிலாவில் கஞ்சி ஊற்றும் போது கல கலப்பான பேச்சுடன் கலாட்டா, பள்ளியில் உள்ள மைக்கில் நோன்புத் திறக்கலாம், நோன்புத் திறக்கலாம் என்று சொல்ல போட்டா போட்டி, நோன்பு திறக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு சிக்கிலா, இவருக்கு ரெண்டு சிக்கிலா எனும் செல்லமாக கஞ்சி சண்டை, கூட்டத்தில் இடித்துக் கொண்டு ஹவுலில்(பள்ளியில் இருக்கும் நீர் தேக்கப் பள்ளம்) விழுந்து விட பெரியோர் யாராவது வந்து தூக்கி காப்பாற்றி விட்டு திட்டு திட்டுன்னு திட்டுவார். நோன்பு திறந்து வந்ததும் எதிர் வீட்டு சுவர் ஓரம் வரிசையாக உக்காந்து ஜமானுக்கு இருப்பது, திராவியா தொழுகையில் எங்களுக்குள் ஏதாவது சிலுமிஷங்கள் செய்து கொள்வோம். ஹாஜா கேக்கு ஆடி நானா சொல்லும் டீன் டீன் மம்மதை கேட்டு கேட்டு ரசிப்போம். மற்றவர்களின் செருப்புகளை இடம் மாற்றி வைத்து விட்டு தேட விட்டு சிரிப்பது, பலருடைய புது செருப்புகள் திருட்டு போய் விடும் பறிக் கொடுத்தவர் பேந்த பேந்தவென்று விழித்து தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பரிகாசிப்போம். வேண்டும் என்றே கோரசாக ஆமீனை ரொம்ப நேரம் இழுத்து சொல்வது, திக்ரு செய்பவர்கள் தலையை அப்படி இப்படி ஆட்டும் போது வாய் விட்டு சிரிப்பது, விடியும் வரை விழித்திருந்து பகலில் தூங்குவது, பல நாட்கள் பகல் நேரங்களில் கடற்கரை, வஞ்சித்தோப்பு, மற்றும் பல தோட்டங்களுக்கும், வேட்டைக்கு போய் மாலையில் வீடு திரும்புவது, மாலை நேரத்தில் குளங்களில் ரொம்ப நேரம் குளித்து அட்டகாசம் செய்வது இப்படி பலவிதமான சிறுபிள்ளை விளையாட்டுகள் அறியா வயதில் நாங்கள் செய்த தப்புகளை அல்லாஹ் பொறுத்தருள்வானாக.

நள்ளிரவு ஒரு மணி ஆகி விட்டால் சஹர் பக்கீரின் பாட்டுடன் கொட்டு சத்தம். அவருக்காக ஒவ்வொரு நாளும் வாசல் நிலைப்படி மேல் காசு வைத்து விடுவோம். அவர் அதை எடுத்துக் கொண்டு இரண்டு தட்டுகள் கொஞ்சம் வேகமாக தட்டுவார். அக்கம் பக்க வீடுகளில் அம்மி அரைக்கும் சத்தம் கேட்கும், அடுப்பு புகை வாசம் வீசும், சாமான் சட்டு உருட்டும் ஓசை, குவளை,கரண்டி,சட்டி இவைகளை தரையில் வைக்கும் சத்தம் வரும். பேச்சு குரலும், தாளிக்கும் மணமும், சொய் என்ற சவுண்டும் மெய்யாகவே மனதை வருடும். தர்கா மணியோசையுடன் நகரா சத்தம்,பாபா பாய் கடை, மம்மட்டிக் கடை கொத்துப் புராட்டா கொத்தும் இசை ஒலி, சஹர் நேரம் முடிவதற்கு இன்னும் ஒரு நேரம் உள்ளது என்ற ஒலிப்பெருக்கி அறிவிப்பு எல்லாமே செவிக்கு விருந்தளிக்கும். நோன்பு பத்து நாளை கடந்த பின் ஏழை எளிய மக்கள் எல்லா வீடுகளுக்கும் வந்து காசு, பணம், பொருள் தானங்கள் பெற்று செல்வார்கள். ஏழ்மையில் வாழும் உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் வீடு தேடி போய் கொடுப்பவர்களும் உண்டு…

சஹர் நேரத்தில் முனிசிபால்டி பைப்பில் நல்ல தண்ணி வரும் அதை ஆண்களும் பெண்களும் பிடிப்பது. சில வீடுகளில் அலாரம் கிணீர், கிணீரென ஓசையெழுப்பும், அண்டை வீட்டார்களுடன் சஹர் சமையல் பற்றி பெண்கள் சுவரோரம் நின்று பேசிக்கொள்வது, சமைத்த உணவு பரிமாற்றம் செய்து கொள்வது இனிமையாக இருக்கும். இங்கே காய்ச்சிய ரசம் அண்டை வீட்டுக்கு போகும். அண்டை வீட்டில் பொரிச்ச மீன் எங்க வீட்டுக்கு வரும். எல்லாம் சாப்பிட்டு விட்டு வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வது, சஹர் முடிந்து தொழுது விட்டு படுக்கை. காலையில் விழிப்பது சற்று தாமதமாகும். நாங்கள் நல்லா குறட்டை விட்டு தூங்கி பகல்தான் கண் விழிப்போம். இந்நாளில் பெண்கள் நேரம் போக்குவதற்காக கொல்லைப்புறங்களில் மரங்களில் ஊஞ்சல் போட்டு ஆடுவார்கள், டப்பா கோடு விளையாட்டு, தண்ணீ காசு விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என பல விளையாட்டு நோன்பு திறக்கும் நேரம் வரை நடக்கும். இரவு திராவியா தொழுகைக்கு பெண்கள் ஹாஜியார் மாமா வீட்டுக்கும்,ஹாஜிமா (மாம்சா காக்கா வீடு))வீட்டுக்கும் செல்வார்கள். பள்ளிகளில் திக்ரு செய்யும் சத்தங்களும், வீடுகளில் குரான் ஓதும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.27ம் கிழமை இரவு பாவமன்னிப்பு கேட்கப்படும் இரவு என்பதால் பள்ளிகள் எல்லாம் கொஞ்சம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். பள்ளிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். என்றுமே தொழுவதற்கு வராதவர்கள் பலர் அன்று இரவு பள்ளிக்கு வந்திருப்பார்கள்( சிறியோரும் பெரியோரும் உட்பட) அவர்களை பார்த்து சோத்துக்காக வந்து இருக்கிறார்கள் என்று கேலி நையாண்டி செய்பவர்களும் உண்டு. விடிய விடிய பக்தியில் ஆழ்ந்திருப்பார்கள். சில பள்ளிகளில் அன்று இரவு சுமாரான அளவில் சோற்றுக்களறி நடைபெறும். எல்லா பள்ளிகளிலும் கஞ்சிக் காய்ச்சும் முறையுண்டு. நாகூர் கொல்லம் பள்ளியில் 27ம் கிழமை அன்று E.M. ஹனிபா அவர்களின் கஞ்சி முறை அதுவும் பிரியாணி கஞ்சி. செய்யதுப் பள்ளியில் அஜீஸ் சன்ஸ் முறை இரண்டுமே அப்போது பிரபலம். ஏழுலெப்பைப் பள்ளியில் எல்லாமே அமைதியாக அழகாக நிகழ்ந்தேறும். வழக்கப்படி நாங்களும் திராவியா தொழுது விட்டு விளையாட்டில் குதிப்போம். பேய்களுக்கெல்லாம் விலங்கிடப்பட்ட மாதம் என்பதால் பயமில்லாமல் ஒளிஞ்சான் புடிச்சான் விளையாடுவோம். இப்படியே நோன்பு மாதம் நோன்போடும் மாண்போடும் கள்ளங் கபடமில்லாத விளையாட்டோடும் மகிழ்ச்சியாக நகரும். இதில் ஒன்றாவது இந்தக் காலத்தில் இருக்கா ?
கடமைகள் எதுவும் மாறவில்லை. காணும் காட்சிகளும், கட்டிடங்களும், வாழ்வியலும், வழித் தடங்களும், உணவு வகைகளும், நடைமுறைகளும், உறவுகளில் இருந்த நெருக்கங்களும் நம்மிடையே முழுவதுமாக மாறி விட்டன. இதனால் தான் பலரது இதயங்கள் பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்து இனிமை பெற ஏங்குகின்றன. எண்ணத்திலும், செயலிலும் தூய்மை இருந்தால் எல்லா காலங்களும் இனிமையே…..

- கவிஞர் நாகூர் காதர்ஒலி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter