Home » ‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’ – சலூன் கடைக்காரரை அதிரவைத்த பாஜகவினர் !

‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’ – சலூன் கடைக்காரரை அதிரவைத்த பாஜகவினர் !

0 comment

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லைத்தோப்பு முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, மோகன் சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

அதனையடுத்து, தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார் மோகன். அதனையடுத்து, மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துவந்தனர். குறிப்பாக, நடிகர் பார்த்திபனும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

நேற்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்’ என்றார்.

இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன், மோகனை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். உள்ளூர் பாஜக நிர்வாகிகள் மோகனின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாவட்டத் தலைவர் கே.கே சீனிவாசன் தலைமையில் மோகன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன், தான் பாஜகவில் சேரவில்லை என்றும், வாழ்த்து அட்டை என நினைத்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டதாகவும்; தான் அனைத்து கட்சிக்கும் பொதுவான நபர் என்று கூறியுள்ளார்.

தன்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம் என்றும் தெரிவித்த மோகன், பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter