தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் இரண்டாம்புளிக்காட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (30) கீற்று ஏற்றிச் செல்லும் வேனில் டிரைவராகப் பணி புரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்களத்தைச் சேர்ந்த சுகன்யா (26) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு வருனிகாஸ்ரீ (7), ஜனனிகாஸ்ரீ (5) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கதிரவனுக்கும்,சுகன்யாவிற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகன்யா இரண்டு மகள்களையும் கதிரிடமே விட்டு விட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்றவர், இன்னும் திரும்பிவரவில்லை. தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்தும் அவர் வரவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் கொரோனா லாக்டெளனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் டிரைவர் தொழிலும் செய்ய முடியவில்லை.

இதனால், வருமானம் இல்லாமல் தவித்ததுடன் தனது இரண்டு மகள்களையும் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கதிரவன் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 4-ம் தேதி சிக்கன் உள்ள குஸ்கா சாதம் வாங்கி வந்து அதில் விஷத்தைக் கலந்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஊட்டி விட்டதுடன், தானும் சாப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு பெண் குழந்தைகளும் நேற்று இரவு இறந்துவிட்டன. கதிர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இரண்டாம்புளிக்காடு பகுதி மக்கள் கூறுகையில், “மனைவி பிரிந்துசென்ற கவலை ஒரு பக்கம் கடன் தொல்லை ஒருபக்கம் என கதிர் இருந்துள்ளார். லாக்டெளனால் வருமானம் இல்லாமலும் தவித்துள்ளார். இதனால் தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். தான் வேலைக்குப் போகும் போது குழந்தைகளை பக்கத்து வீட்டிலும், ஒவ்வொரு சமயம் தான் டிரைவராகப் பணிபுரியும் வண்டியின் உரிமையாளர் வீட்டிலும் விட்டு விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் சம்பவ தினத்தன்று தனது இரண்டு மகள்களையும் தானே குளிப்பாட்டு விட்டு பட்டுச் சட்டை பட்டுப் பாவடை உடுத்திவிட்டுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டுவிட்டு சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு கடைக்குச் சென்று சிக்கன் மற்றும் குஸ்கா வாங்கிக் கொண்டு வந்து அதில் விஷத்தைக் கலந்து மகள்களுக்கு ஊட்டியுள்ளார். அதன் பிறகு தானும் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டுள்ளார்.
தான் வாழப்போற கடை சில மணி நேரங்களை மகள்களுடன் சந்தோஷமாகக் கழித்துள்ளார். தனக்குப் பிறகு தன் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? சின்ன பிள்ளைகளால் எப்படி வாழ முடியும் என நினைத்து, தனது மகள்களுக்கும் விஷம் கலந்த சாப்பாட்டைக் கொடுத்துள்ளார். இதில் அந்தக் குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில் கதிரவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
மற்றொரு தரப்போ, `கதிருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அதனால்தான் அவர் மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். அவரின் அப்பா குடியிருப்பதற்கு இடம் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டார். அந்த மன வருத்தத்தில் இருந்த கதிர் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார். வாழ்வில் எந்தத் தப்பும் செய்யாத அந்தப் பிள்ளைகளை நினைத்தால் ரொம்பவே வருத்தமாக உள்ளது’ என்கிறார்கள்.