மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற பொது இடங்களையும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றி வருகிறது அரசுகள்.
இதில் சமீபத்தில் இணைந்துள்ளது கர்நாடக அரசு. பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம். பல்வேறு முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் ஹோம் கிரவுண்ட் இதுதான்.
இதில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் மல்லையா மருத்துவமனை அமைந்துள்ளது. இருப்பினும் சின்னசாமி ஸ்டேடியம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே மாநில கொரோனா மேலாண்மை பொறுப்பு அமைச்சரான அசோக் கூறுகையில், இதுபோன்ற முடிவு காரணமாக பெங்களூர் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னசாமி ஸ்டேடியம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது. போதிய அளவுக்கான உபகரணங்கள் அங்கு கொண்டு செல்லப்படுகின்றன. பெங்களூரில் 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனை அழைத்து செல்வதற்கு தயாராக உள்ளன. இவ்வாறு அமைச்சர் அசோக் தெரிவித்தார்.
இந்திய பெரு நகரங்கள் பட்டியலில் பெங்களூரில்தான் கொரோனா மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக அங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவாகி கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப மருத்துவ கட்டமைப்பு வசதிகளை அரசு இன்னும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில்தான் 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பெங்களூர் நகர மேற்பார்வைக்கு நியமித்துள்ளது அரசு. மேலும் 7 அமைச்சர்களை இதற்காக நியமித்துள்ளார் எடியூரப்பா. ஆம்புலன்ஸ்கள் பற்றாகுறை, போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் இந்த பிரச்சினைகளை சீர் செய்வதில் அமைச்சர்கள் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சின்னசாமி ஸ்டேடியம் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.