அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு உட்பகுதியில் உள்ள ஷேக் உதுமான் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால், புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய வடிகால் அமைக்காமல், வேக வேகமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் நூருல் ஆபிதீன் கூறுகையில், ஷேக் உதுமான் சாலையில் புதிய வடிகால் அமைக்காமல் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துவிட்டோம். பிறகு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 தினங்களுக்குள் வடிகால் அமைத்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்திருந்தனர். ஆனால் சம்மந்தப்பட்ட புதிய வடிகால் பணி நடைபெறாமல், புதிய சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வரக்கூடிய மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சுற்றுப்புற வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஷேக் உதுமான் சாலை பணியை ஆய்வு செய்து புதிய பாதாள சாக்கடை மற்றும் வடிகால் அமைத்த பிறகு புதிய தார்சாலை அணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே சாலை அமைக்கும் பணி தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடற்கரைத்தெருவாசிகளின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும்.



