அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், இது ஒழுங்கீனமான செயல் என்று சூரப்பாவுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில நிதி உரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம் என அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பை எதிர்பார்க்கிறது மத்திய அரசு. நிதி ஒதுக்கீடு குறித்தோ, பங்களிப்பு பற்றியோ இன்னும் தமிழக அரசு வாய் திறக்காத நிலையில் மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா. சர்ச்சை வெடித்ததும் பதிலளித்த சூரப்பா, மாநில அரசுக்கு தெரிந்துதான் கடிதம் எழுதினேன் என்றார்