இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கி அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.