வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று இரவு 8.20 மணியில் இருந்து கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது மழை மற்றும் காற்று நின்று, இடி மற்றும் மின்னல் இருந்து வருகிறது.
சற்று நேரத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் அதிரை ஆறுமுக கிட்டங்கி தெருவில் மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் ஆறு மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. ஹாஜா நகரில் ஒரு மின்கம்பம் சாய்ந்துள்ளது. இதனால் அதிரை முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியிலும், மின்கம்பிகள் அமைக்கும் பணியிலும் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரையைக் கடந்த நிவர் புயல், தற்போது ராயலசீமா பகுதியில் தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் ஈரப்பதமான காற்றை ஈர்ப்பதாலேயே, அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
வீடியோ :