பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த டிசம்பர் 3 அன்று அமலாக்கத்துறை (E.D) சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று 11.12.2020 நடைபெற்றது.
அரசு அமைப்புகளான என்.ஐ.ஏ, இ.டி, சி.பி.ஐ போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, அந்த அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களை, மேற்கண்ட அரசு அமைப்புகளை கொண்டு மிரட்டுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை கடந்த 3ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையை கண்டித்து தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மாலை 4.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைவர் A.ஹாஜா அலாவுதீன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பகுதி தலைவர் அப்துர் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பவாஷ், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தங்க குமரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினர். இறுதியில் பட்டுக்கோட்டை பகுதி செயலாளர் சதாம் உசேன் நன்றி உரை ஆற்றினார்.
இதில் அத்துமீறி சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.













