மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி என பதவியை ராஜினாமா செய்த டிஐஜி பெருமையுடன் தெரிவித்து உள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஆதரவு குரல் பெருகி வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக போாரட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டம் மூலமாக இந்த போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். லக்மிந்தர் சிங் ஜக்கர் ராஜினாமாவை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாக போராடிவரும்விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி. நான் தற்போது உயர் பதவியில் வகிக்க காரணம், விவசாயியான எனது தந்தை வயல்களில் கடுமையாக உழைத்ததே ஆகும். எனவே எல்லாவற்றிற்கும் நான் விவசாயத்திற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
80 வயதான எனது தாயும் விவசாயிதான். அவர் என்னிடம் பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும்படி கூறினார். நான் விரைவில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வேன். இவ்வாறு லக்மிந்தர் சிங் ஜக்கர் தெரிவித்தார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏற்கெனவே விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.