இணையதளங்களில் தொடர் திருட்டு செய்திகளை படித்துக் கொண்டிருந்த நான் அன்றையதினம் சற்று அசந்து தூங்கிவிட்டேன். திடீரென எனது நண்பன் கால் செய்து உடனே தனது வீட்டிற்கு என்னை வர சொன்னான். நானும் சரி என கூறிவிட்டு எழுந்து சென்றேன். அங்கு சென்றதும் தான் தெரிந்தது நண்பனின் புல்லட் பைக் திருட்டு போன கதை. உடனடியாக நானும் நண்பனும் நகர காவல் நிலையத்திற்கு போய் புகார் மனு கொடுத்தோம்.
அங்கு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ ஒருவர் எங்களது புகாரை அரைநொடியில் ஏற்றுக்கொண்டு ஒருநொடியில் சி.எஸ்.எஸ்.ஆர் கொடுத்து இருநொடியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். 5 வருடத்தில் ஓய்வுபெற இருக்கும் முதுநிலை முதன்மை முதலாம் நபர் முதலில் ரூ.10,000 லஞ்சமாக கேட்டு பின் ரூ.9999க்கு இறுதி செய்யும்போது எங்களின் கண்களுக்கு அந்த அரைநொடி எஸ்.எஸ்.ஐ வியப்பாக தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
பின்னர் 58 நொடிகளில் எனது நண்பனின் புல்லட் பைக்கை மீட்டு எங்களிடம் பம்பரமாய் ஒப்படைத்தார். இதனிடையே அந்த கொள்ளை கும்பலை ஒருக்காட்டு காட்டியிருக்கிறார் நமது அரைநொடி எஸ்.எஸ்.ஐ. பின்னர் தான் தெரிந்தது முதுநிலை முதன்மையான முதலாம் நபருக்கும் கொள்ளையருக்கும் இடையே இருக்கும் உண்மை தொடர்பை பயன்படுத்தி இந்த அசத்தல் வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார் நமது அரையொடி எஸ்.எஸ்.ஐ.
இதற்கு மத்தியில் அரைநொடி எஸ்.எஸ்.ஐ அந்த கொள்ளை கும்பலுக்கு கொடுத்த தர்மத்திற்கான அடியை பார்த்த நான் சட்டென்று பதறிக்கொண்டு எழுந்தேன் உறக்கம் களைந்தது.