கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாடு முழுவதும் இதுவரை திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் மத்திய கல்வி அமைச்சகமோ கட்டாயம் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இணையவழித் தேர்வுகளாக அல்லாமல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதும் முறையில்தான் தேர்வுகள் இருக்கும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருந்தார்.
இதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் நன்கு தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு தேர்வுக்கும் போதுமான நாள்கள் இடைவெளியுடன் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 15-ல் வெளியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.