மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி அருகே பல லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 39 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் விவசாயிகளின் விரோதி மோடி என்ற தலைப்பில் டிச. 26 முதல் ஜன. 5 வரை SDPI கட்சி மாபெரும் பிரச்சாரப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் SDPI கட்சி சார்பில் விவசாயிகளின் விரோதி மோடி என்ற தலைப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராடும் விவசாயிகளை நசுக்காதே; விவசாயிகளை கார்பரேட்டுகளிடம் விற்காதே; விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய் என்ற கோரிக்கை முழக்கத்துடன் அதிரையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி தலைமை வகித்தார். SDPI அதிரை நகர தலைவர் அஸ்லம் வரவேற்புரை ஆற்றினார். SDPI கட்சியின் தேசிய துணைத்தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். மேலும் திமுக மாவட்ட இணைச்செயலாளர் காவன்னா. அண்ணாதுரை, விசிக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நா. இளந்தென்றல், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஆர். ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, குடைபிடித்தபடி பங்கேற்று பொதுமக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர். இறுதியாக SDPI அதிரை நகர செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறினார்.


















