கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹாதியாவை அவரது பெற்றோர் கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பெண் போலீஸ் துணையுடன் காரில் அமர்ந்திருந்த ஹாதியாவை பேட்டிகாண கொச்சி விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர்கள் குவிந்திருந்தனர். அவர்களை காரின் அருகே நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அங்கு நிலவிய கூச்சல் குழப்பத்துக்கு இடையே., ‘நான் ஒரு முஸ்லிம். என்னை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. எனது கணவருடன் சேர்ந்திருக்க விரும்புகிறேன்’ என ஹாதியா கூச்சலிட்டார். இதனால், அங்கு மேலும் பரபரப்பு கூடியது.
அவரை மேற்கொண்டு பேச விடாமல் பெற்றோரும், போலீசாரும் விமான நிலையத்துக்குள் இழுத்து சென்றதாகவும், அங்கிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.